கவலை.. கண்ணீர்.. இழப்பு.. சோகம்.. இப்படி பல சம்பவங்கள் உங்கள் வாழ்க்கையில் சமீபத்தில் நடந்திருக்கலாம். திரும்பத் திரும்ப அவைகளை பற்றியே சிந்திப்பதும், பேசுவதும், அச்சப்படுவதும், ஆறுதல் தேடுவதும் தவிர்க்கப்படவேண்டும். நடந்தவை நடந்தவைகளாக இருக்கட்டும். அவைகளை வேண்டாத நினைவுகளாக்கி, குப்பையில் தூக்கி எறிந்துவிட்டு இன்றைய பொழுதை உற்சாகமாக எதிர்கொள்ளுங்கள்!
பலரை நிம்மதி இழக்கச் செய்துள்ளது, பழைய நினைவுகள். கசப்பு நிறைந்த பழைய நினைவுகளை அழிப்பது அவ்வளவு சுலபமல்ல. ஆனாலும் அதையே நினைத்துக்கொண்டு நிகழ்காலத்தையும் பாழாக்கிக்கொள்ள வேண்டிய அவசியம் இல்லை!
கசப்பான பழைய நினைவுகள் நமக்கு புதிய அனுபவங்களை தந்துவிட்டு போயிருக்கின்றன. நேற்றைய அந்த அனுபவங்கள், இன்றைய வாழ்க்கையை செம்மைப்படுத்த உதவும். அதனால் பழைய சம்பவங் களில் இருந்து அனுபவ பாடத்தை மட்டும் எடுத்துக்கொண்டு, சம்பவத்தை மறந்துவிடவேண்டும்.
மனதிற்கு துன்பம் தரும் பழைய விஷயங்களை மறக்க முடியாவிட்டாலும் அதற்கு முக்கியத்துவம் கொடுப்பது தேவையற்றது. அவைகளை நினைத்து புலம்புவது, அழுவது போன்ற செயல்கள் உங்களை பலமாக்காது. பலகீனமாக்கும்.
இன்றைய வாழ்க்கையை எதிர்கொள்ளவே நமக்கு ஏராளமான சக்தி தேவைப்படுகிறது. அந்த சக்தியை சேகரிப்பதற்கு பதில், பழைய நினைவுகளால் இருக்கிற சக்தியையும் இழந்து கொண்டிருப்பது அவசியமற்றது. பயனற்ற பழைய விஷயங்களை நினைத்துக்கொண்டிருப்பவர்களால், போட்டி போட்டு வாழ்க்கையில் முன்னேற முடியாது.
முடிந்து விட்ட பொழுதை விட நடந்து கொண்டிருக்கும் பொழுதிற்கு நம் வாழ்க்கையில் பங்கு அதிகம். அதில் தான் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். வாழ்க்கையை பயனுள்ளதாக அமைத்துக் கொள்ள பழைய நினைவுகளை அழிக்க வேண்டியது மிக மிக அவசியம்.
கடந்த காலம் என்பது எல்லோருக்கும் உண்டு. அதில் மகிழ்ச்சியும் இருக்கும். சோகமும் இருக்கும். அந்த மகிழ்ச்சியை நினைத்துப் பாருங்கள். சோகத்தை நினைத்துப்பார்க்காதீர்கள்.
தங்களது நினைவாற்றலை பெருமைப்படுத்திக் கொள்ள பலர் எப்போதோ நடந்த வேண்டாத விஷயங்களைப் பற்றியெல்லாம் இப்போதும் பேசிக்கொண்டிருப்பார்கள். அன்று அதற்கு காரணமானவர்களையும் இன்று சும்மாவே வம்புக்கு இழுப்பார்கள். இது மனித இயல்புக்கு எதிரானது.
திருமண மேடை! உறவினர் என்ற முறையிலோ, நண்பர் என்ற முறையிலோ உங்களை மணமகள் மணவிழாவுக்கு அழைக்கிறாள் என்று வைத்துக்கொள்ளுங்கள்.
அங்கே உங்கள் வேலை அந்த மணமகளை மகிழ்ச்சியோடு வாழ்த்துவதுதான். அதற்கு மாறாக சிலர் அந்த மணமகள் ஏற்கனவே ஒரு தடவை காதல் தோல்வி அடைந்ததையும், ஏற்கனவே ஒருமுறை நிச்சயதார்த்தம் வரை சென்று திருமணம் நின்றுபோனதையும் சுட்டிக்காட்டி, ‘அதை எல்லாம் கடந்து வந்துவிட்டாய்’ என்று பழைய கசப்புகளை நினைவுபடுத்துவார்கள். இது ஒரு மோசமான முன்உதாரணமாகும். தேவையே இல்லாத பழைய விஷயங்களை கிளறிவிட்டு, அந்த மணப்பெண்ணை காயப்படுத்தும் செயலாகும்.
இன்னும் சிலரையும் நீங்கள் பார்த்திருப்பீர்கள். திருமண மேடையில் மணப்பெண்ணை வாழ்த்தப்போகிறேன் என்று கூறிக்கொண்டு அந்த பெண்ணை அழவைத்துவிடுவார்கள். அவர்கள் மணப்பெண் மீது அதீத அக்கறை உள்ளவர்கள் போன்று காட்டிக்கொண்டு ‘ம்...இந்நேரம் உங்கப்பா உயிரோட இருந்திருந்து இந்த காட்சியைப் பார்த்திருந்தா எவ்வளவு சந்தோஷப்பட்டிருப்பார். கொடுத்து வைக்காத மனுஷன் போய் சேந்துட்டார். உன் அதிர்ஷ்டம் அவ்வளவுதான்’ என்று பழைய விஷயங்களை நினைவுபடுத்தி, அந்த மகிழ்ச்சியான சூழலை கெடுத்துவிட்டு படி இறங்கிபோய்விடுவார்கள்.
இதை வெளிப்படையாகப் பார்த்தால், அந்த மணப்பெண் மீது அக் கறை கொண்டிருப்பதுபோல் தோன்றும். ஆனால் இப்படிப்பட்டவர்கள் திட்டமிட்டு வந்து, அந்த பெண்ணின் மகிழ்ச்சியை கெடுத்து விட்டு போய்விடுவார்கள்.
பெரிய அறுவைச் சிகிச்சையிலிருந்து பிழைத்து வீடு வந்து சேர்ந்தவரை நலம் விசாரிக்க செல்பவர்கள் சிலர், அவருக்கு அறுவைச் சிகிச்சையை விட அதிக வலியை கொடுப்பார்கள். ‘இந்த வயதிலே இப்படி ஒரு அறுவை சிகிச்சையா! எல்லாம் உன் தலையெழுத்து. இனி உடம்பு தேறுவதே கஷ்டம் தான். என்னதான் உயிர் பிழைத்தாலும் பழைய ஆரோக்கியம் திரும்பாது. அவ்வளவுதான் இனி நீ பழையதுபோல் ஓடியாடி வேலைபார்க்க முடியாது. உன் நிலை வேறு யாருக்கும் வரக்கூடாது’ என்பார்கள்.
உடல்நிலை தேறிவரும் மனிதருக்கு தேவை, மனோபலம். இப்படி அவரிடம் சொன்னால், மேலும் பலகீனமாகிவிடுவார். இப்படிப்பட்ட மனிதர்கள், நோயாளிகள் யாரையும் பார்க்கச்செல்லாமல் இருப்பது நல்லது.
பழைய விஷயங்களிலிருந்து மனிதர்களை மீண்டு வரவைப்பது என்பது பெரிய கலை. அந்தக் கலையை பிரயோகிக்க எல்லோருக்கும் தெரியாது. ஆனால் பழைய துன்பங்களை தூண்டிவிட்டு நிகழ்கால மகிழ்ச்சியை கலைப்பது என்பது பலருக்கும் தெரிந்த கலையாகிவிட்டது. அதிலும் ரகசியமாக இருக்கும் பழைய கசப்பான சம்பவத்தை, காலங்கள் கடந்து பலர் முன்னால் வெளிப்படுத்தி வெறுப்பேற்றுபவர்கள் இருக்கிறார்களே, மகா மோசமானவர்கள்!
‘வீட்டை விட்டு ஓடிப்போச்சே உன் ரெண்டாவது பொண்ணு இப்ப எப்படி இருக்கா?’ இப்படி பலர் முன்னால் கேட்டு, தாயை வேதனைப்படுத்தும் பெண்கள் இருக்கிறார்கள்.
அந்த பெண் ஓடிப்போனது என்றோ நடந்த சம்பவம். அந்த பெண், அவரையே திருமணம் செய்துகொண்டு குழந்தைகளும் பெற்று, அவர்களும் வளர்ந்து பெரியவர்களாகியிருப்பார்கள். அந்த பெண்ணை பற்றி, அவளது தாயிடம் கேட்பது எப்படி சரியாக இருக்கும்?
கூடுமானவரை முடிந்து போன விஷயங்களை பேசாதிருக்கவேண்டும்.
அதுவும் மற்றவர்களைப் பற்றிய விஷயங்கள் என்றால் பேசவேகூடாது.
இதில் இரண்டு ரகமானவர்கள் இருக்கிறார்கள். ஒரு ரகத்தினர், பேசத் தெரியாமல் பேசுவார்கள். இன்னொரு ரகத்தினர் வேண்டுமென்றே திட்டமிட்டு பின்விளைவுகளை உருவாக்கவே பேசுவார்கள்.
இப்படித்தான் ஒரு பாட்டி, கிரகப்பிரவேச வீட்டிற்கு வந்தார். வந்தவர், வீட்டை சுற்றிப்பார்த்துவிட்டு, மகிழ்ச்சி முகத்தோடு வரவேற்ற வீட்டின் உரிமையாளரான பெண்ணிடம் சென்றார். ‘வீடுகட்டி கிரகப்பிரவேசம் பண்ணிட்டே! ரொம்ப சந்தோஷம். அது சரி உன் முதல் புருஷன் எப்படி இருக்கார்?’ என்று கேட்டார்.
அருகில் நின்றிருந்த பலருக்கு அப்போதுதான், ‘அந்த பெண்ணுக்கு ஏற்கனவே ஒரு திருமணம் நடந்து, விவாகரத்து ஆன கதை’ தெரியவந்தது.
அந்த பெண்ணோ, ‘ஏண்டா இந்த பாட்டியை விழாவுக்கு அழைத்தோம்’ என்று வியர்த்துப்போய்விட்டாள்.
சம்பந்தமே இல்லாமல் இப்படி ஒரு கேள்வியை கேட்டு, மற்றவர்களை திணறவைப்பதில், அவர்களுக்கு ஒரு மட்டமான சந்தோஷம். ‘உன்னைப் பற்றிய எல்லா விஷயமும் எனக்குத் தெரியும் ஜாக்கிரதை’ என்பது போன்று பிளாக்மெயில் பேச்சு பேசுபவர்களிடம் எப்போதும் கவனமாக இருக்கவேண்டும்.
வேண்டாத பழைய நினைவுகளை விட்டு வெளியே வருவது கஷ்டம்தான். இருந்தாலும் என்ன செய்வது மீதமுள்ள வாழ்க்கையை வாழ்ந்தாக வேண்டுமே. அதற்கு நம்மை தயார் படுத்திக் கொள்ள வேண்டும் அல்லவா!
மனதை ஒரு நிலைப்படுத்தி தியானம் செய்வதன் மூலம் வேண்டாத நினைவுகளிலிருந்து மீண்டு வரலாம். மனமும் பக்குவப்படும். அமைதியடையவும் செய்யும்.
0 comments